வேடிக்கைகளும் வினோதங்களும் நிறைந்த மனிதர்கள் வாழும் இதே மண்ணில் வாழும் ஒருவனின் வாழ்க்கை கதை.. இந்த கதை முற்றிலும் கற்பனையே!
வீட்டினுள் நுழைந்த அடுத்த கணம் தனது அறையின் மின்விசிறியை ஆன் செய்து, அடுத்த நொடியே படுக்கையில் வீழ்ந்தான் ராஜ். பெங்களூரின் அசுர போக்குவரத்தில் பயணித்த அவனுக்கு அந்த உடனடி ஓய்வு தேவையாக இருந்தது. மேலே அணிந்திருந்த ஜெர்கினை கழட்டும் அளவிற்கு, உடலிலும் மனதிலும் தெம்பில்லாமல் வந்த ராஜ் மெல்ல தனது மொபைல் போனை எடுத்து தனக்கு அவளிடம் இருந்து வந்த பழைய மெசேஜ்களை படிக்க தொடங்கினான். அவனுக்கு அது ஆறுதலாக இருந்தது... இருந்தாலும் அன்று அவன் அலுவலகத்தில் நடந்த அந்த நிகழ்வு, அவனது சிறு மகிழ்ச்சியை சுக்குநூறாக சிதறடித்தது.
அணிந்திருந்த ஜெர்கினை கழற்றி அறையின் ஒரு மூலையில் வீசினான். அறையில் தனது நண்பர்கள் இல்லாததால், சிந்தனையை பின்னோக்கி அழைத்து சென்றான்..
சரியாக பதினான்கு மாதங்களுக்கு முன்பு,
அவன் மும்பையில் வேலைப்பார்த்த சமயம். முதன்முறையாக, அன்னையின் அரவணைப்பில் இருந்து விடுபட்ட நேரம். முதல் விமான பயணம். அனைத்துமே அவன் வாழ்க்கையில் அது முதன்முறை. அவள் சந்திப்பும் தான். சென்னையில் வேலைப்பார்துக்கொண்டிருந்த ராஜ்க்கு முதல் இடமாற்றம். எதையும் தீவிரமாக ஆராய்ந்து செயல்படும் அவனுக்கு, அந்த இடமாற்றம் சிறிது அதிர்ச்சியை கொடுத்தாலும், வாழ்க்கை எனும் காட்டாற்று வெள்ளத்தில் நீந்த தன்னை தயார் படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கருதி மும்பை புறப்பட்டான்.
ராஜின் கம்பனி மும்பையை தலைமையிடமாக கொண்டது. ராஜ்க்கு கெஸ்ட் ஹவுஸ் அரேஞ்ச் செய்யப்பட்டிருந்தது. அதே கெஸ்ட் ஹவுசில் தான் அவனுடன் சென்னையில் பணிபுரிந்த நண்பர்கள் இருவர் தங்கியிருந்தனர். அணைத்து உறவுகளையும் நண்பர்களையும் முதன்முறையாக பிரிந்து வந்த ராஜ்க்கு அது சிறிது ஆறுதலாக இருந்தது. ராஜ் வேலைப்பார்க்கும் கம்பனி விலே பார்லேவில் இருந்தாலும், அவன் வந்த ப்ராஜக்ட்டுக்காக மும்பையின் கடலோரப்பகுதியான் வோர்லியில் உள்ள பார்க்லேய்ஸ் பேங்கில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம். ராஜ், முதல் நாளே மும்பை வாழ்க்கையை வெறுத்தேவிட்டான். இதற்க்கு இரண்டு காரணங்கள் முதலாவது உணவு, மற்றொன்று மொழி. இந்தியில் அவனுக்கு தெரிந்த ஒரே வாக்கியம் "ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுதாத்தா". அதேபோல் இட்லி, தோசையை தவிர வேறேதும் அறியாத அவனுக்கு, ரோடடியும், சப்பாத்தியும் சிறிது கலக்கத்தை ஏற்படுத்தின. இருந்தாலும் அவனது புது வேலை, அவனுக்கு கொஞ்சம் புத்துணர்வு அளித்தது.
காலை கதிரவன் பொன்னொளி வீசும் பொழுதில், இரைதேடி புறப்படும் பறவைகள் போல, அலுவலகங்களுக்கு பறந்துகொண்டிருந்தனர் மும்பைவாழ் மக்கள். இன்றே உலகின் கடைசி நாள் என்பதை போல, அனைவரின் முகத்திலும் அவசரம். ராஜின் நண்பர்கள் அலுவலகம் சென்றுவிட்ட நிலையில், தாமதமாக எழுந்த ராஜ், கடிகாரத்தை பார்த்தான். மணி ஒன்பதை கடந்து சென்றுக்கொண்டிருந்தது. அவனுக்கு அது அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. தாமதம் என்பது ராஜ் வாழ்க்கையின் ஒரு அங்கம். எங்கேயும் எப்போதும், குறித்த நேரத்தைவிட அரை மணி நேரம் தாமதமாக செல்வதே வழக்கம். இருந்தாலும் அன்று சிறிது கலங்கினான். கலக்கத்திற்கு காரணம், அலுவலகத்திற்கு தனியாக செல்ல வேண்டிய சூழ்நிலை. சிறிது நேரத்தில் குளித்து முடித்து வெளியே வந்தவன், காலை உணவிற்காக கெஸ்ட் ஹவுஸ் உணவு விடுதிக்கு சென்றான். காலை எட்டு மணிக்கே காலை உணவு முடிந்துவிடும் என்ற நிதர்சனத்தை அறியாத ராஜ், வெறும் வயிற்றுடன் அலுவலகம் புறப்பட்டான்.
மும்பையின் கோடை வெயிலில், வியர்க்க விறுவிறுக்க அலுவலகத்தை அடைந்தான் ராஜ். அலுவலகத்தின் வாயிலில் நின்று, வியர்வையை கைகுட்டையால் துடைத்துகொண்டிருந்த ராஜ், தன் மீது யாரோ மலர்கொத்துக்களை வீசுவதை உணர்ந்தான். மலரின் மோதலினால் ஏற்ப்பட்ட தடுமாற்றதிலிருந்து ராஜ் வெளிவரும் முன், வாச மலரில் தேடிப்பிடித்து கொணர்ந்து வந்த செந்தேனை போன்ற இனிமையான குரலில் "ஐ ஆம் ரியலி சாரி" என்ற வார்த்தைகள் அவனை மேலும் நிலைதடுமாற வைத்தது. இனிமைக்குரல் அவனை மயக்கினாலும், இரண்டொரு நொடியில் தன்னிலை உணர்ந்தவன், மெல்லத்திரும்பினான்.
"மாலை நேரத்து மயக்கும் நிலவையொத்த முகம்
ஆயிரம் கவிப்பாடும் அகன்ற கண்கள்
முகுந்தனே பார்த்து மதி மயங்கும் மூக்கு
தேனருவியின் பிறப்பிடமான உதடுகள்"
என்று அவளின் முடி முதல் நுனி வரை அனைத்து அங்கங்களையும் கணப்பொழுதில் வருணித்து முடித்தவன், "அவள்... அழகிற்கே இலக்கணம்" என்றே முடிவு செய்தான். முதல் தடுமாற்றதிலிருந்தே வெளிவராமல் இருக்கும் ராஜ்க்கு அடுத்தடுத்த ஆச்சரியங்கள் அவனை செயலிழக்க செய்தது. எங்கோ இருந்து வந்த "டொக் டொக்" ஒலி அவனை மெல்ல அதிர்ச்சியிலிருந்து வெளிவர உதவின. அதன்பிறகு தான் அவன் காதுகளில் யாரோ கத்தும் சத்தம் கேட்க்கதொடங்கியது.
"டேய், எவ்ளோ நேரமா கதவ தட்டிட்டு இருக்கேன். வந்து கதவ தெறடா" என்ற வாக்கியம் அவனை நினைவுகளில் இருந்து நிஜத்திற்கு கொண்டுவந்தது. விரைந்து எழுந்தவன் ஓடிச்சென்று கதவை திறந்தான்.
"டேய்... என்ன ஈவினிங்கே தூக்கமா?" என்று கேட்டான், ராஜின் பன்னிரண்டு வருட நண்பன் ஆகாஷ்.
No comments:
Post a Comment